செவ்வாய், 11 ஜூன், 2013

இரண்டாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பு!

ஆக்கம்: நாக. இளங்கோவன்

தலைப்பில் “இரண்டாம்” என்ற சொல் வரும்போதே இதைப்போன்ற முதலாம் நிகழ்வு இருந்திருக்க வேண்டும் என்று யாவரும் எண்ணுவது சரியே. அது ஏறத்தாழ இரண்டாண்டுகள் பழைமையானது. முதலாம்  நிகழ்வைப் பற்றி விரிவாகப் பின்னர் காண்போம். தற்போதைய நிகழ்வைப் பதிவு செய்வதே நோக்கம்.

முதலாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பு முயற்சியில் 5 தமிழ் எழுத்துகளைக் கொண்டுபோய் கிரந்த-ஒருங்குறியிலும், முன்பின் பார்த்திராத 26 கிரந்த எழுத்துகளை தமிழ்-ஒருங்குறியிலும் கலந்து தமிழின் முகவரியை, அடையாளத்தைக் கணிப்பரப்பில் நீக்குவதற்காக தமிழ் அழிப்பாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது தமிழ்நாடு, தமிழ் கூறு நல்லுலகம் இவற்றொடு தமிழக அரசாங்கமும் திரண்டெழுந்து எதிர்த்ததால் தமிழ் அழிப்பாளர்கள் பின்வாங்கினார்கள்.

ஆயினும், விடாமுயற்சியாக, தற்போது, “ன, ழ” என்ற இரண்டு எழுத்துகளையாவது கிரந்த-ஒருங்குறியில் கொண்டுபோய்ச் சேர்த்து விட வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழ்-அழிப்பாளர்கள். முதலில் இவ் இரண்டைச் சேர்த்து விட்டால் பின்னர் ஒவ்வொன்றாக மீதி மூன்றையும் சேர்த்து விடலாம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கக் கூடும்.

முதலாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பில் (த.ஒ.அ) முன்களத்தில் இருந்து செயற்பட்ட அதே திரு.நா.கணேசன் அவர்களே இம்முறையும் முன்களத்தில் இருக்கிறார். ஆனால், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பியிருக்கும் முன்னீடு (proposal) ஒரு மேனாட்டவரிடம் இருந்து போகுமாறு ஏற்பாடாகியிருக்கிறது இம்முறை.

திரு.மைக்கேல் எவர்சன் என்ற மேனாட்டவர் இவ் இரு தமிழ்
எழுத்துகளையும் கிரந்த-ஒருங்குறியில் கலக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் கடந்த வருட இறுதியில் அனுப்பினார்.

அம் முன்னீட்டைப் பாராட்டி, ஆதரித்து, அக்கலப்பிற்குப் பரிந்துரையாக  திரு.நா.கணேசன் ஒரு மடலையும் சேர்த்தியத்திற்கு அனுப்பினார்.

முதலாம் த.ஒ.அ இற்கு ஆதரவு காட்டிய அறிஞர் பெருமக்கள் வரிசையில் இம்முறை திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களும் சேர்ந்தது மிகப்பெரும் அதிர்ச்சியாகவே தமிழுலகிற்கும் தமிழ்க் கணியிலகிற்கும்\
ஆகிப் போனது. மறவன்புலவாரும் இந்த “ன,ழ” எழுத்துகளை கிரந்த-ஒருங்குறியில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்து ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார் சேர்த்தியத்திற்கு. மிக வருந்தத் தக்க ஒன்றாகும்.

அதில் என்னதான் தேவை சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்கையில், நமக்கு வியப்பே மிகுகிறது. “தாய்லாந்து நாட்டில் உள்ள அரச வம்சத்தார் சிலருக்குத் தேவார திருவாசகத்தைக் கிரந்தத்தில் படிக்க ஆசையிருப்பதால்” தயவு செய்து கிரந்தத்தில் இவ் இரு எழுத்துகளையும் கலந்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

“எனது ஆங்கிலத்தில் “ழ” இல்லை. ஆனால் “ழ” வை வைத்துள்ள தமிழர்கள் தமிழைவிட ஆங்கிலத்தையே அதிகம் படிக்கிறார்கள். அதனால், ஆங்கில-ஒருங்குறியில் தமிழ்-ழ வைச் சேர்த்து விடுங்கள் என்று எந்த ஆங்கிலேயராவது சொல்வாரா?”

ஆனால் தமிழர் “அவர்களின் கிரந்தத்தில் இவ் எழுத்துகள் இல்லை – அதனால் எமது எழுத்துகளைக் கொண்டு போய் அங்கு சேருங்கள் – அங்கே இருக்கின்ற எழுத்துகளையெல்லாம் கொண்டு வந்து இங்கே வந்து சேருங்கள்” என்று சொல்கிறார்கள். தமது மொழியைச் சிதைக்கும் நுண்ணிய கூறுகளை தலைமேற் சுமந்து செய்கிறார்கள்.

முதலாம் த.ஒ.அவின் போது, திரு.நாகசாமி, திரு.செ.இராசு, திரு.இ.அண்ணாமலை ஆகிய அறிஞர்கள் திரு.கணேசனின் முன்னீட்டிற்குப் பின் ஆதரவு அளித்துச் சேர்த்தியத்திற்கு அனுப்பியிருந்தார்கள். திரு.கணேசன்
இம்முறை சேர்த்தியத்திற்கு எழுதிய கடிதத்தில் அவர்களை மறக்காமல் நினைவு கூர்ந்ததொடு திரு.சச்சிதானந்தன் அவர்களையும் பின் ஆதரவில் சேர்த்திருக்கிறார்.

இவர்களின் முன்னீடுகள், பரிந்துரைகளைப் பார்த்த தமிழுலகம் வருந்தத்தான் செய்தது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன் அவர்கள் இம்முயற்சியை எதிர்த்து சேர்த்தியத்திற்குக் கடிதம் எழுதினார்.
அமெரிக்கத் தமிழறிஞர் சு.பழனியப்பன் மிக வலுவான ஆய்வுக் கட்டுரை எழுதி, இவ் எழுத்துகளைக் கலப்பதற்கு எதிர்ப்பு கூறி சேர்த்தியத்திற்கு அனுப்பினார். கோவை தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் சாந்தலிங்கம் மறுப்பினையம் பொருத்தமற்ற முன்னீடு என்பதையும் கூறி கடிதம் எழுதினார். இது எவ்வளவு தேவையற்ற விதயம் என்றும், இதனால் நலமில்லை என்றும் கூறி திரு.இரமணசர்மா சேர்த்தியத்திற்கு விளக்கி எழுதினார். திரு.நூ.த.உலோகசுந்தரம் அவர்களும் தனது மறுப்பினை மிக வலுவாக சேர்த்தியத்தில் பதிவு செய்தார். இவர்களின் எதிர்ப்பினால், சனவரி-பிப்ரவரியில் கூடிய சேர்த்தியம் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தள்ளி வைத்திருக்கிறது. மீண்டும் சேர்த்தியம் கூடும்போது (ஓரிரு மாதங்களில்) இது குறித்து முடிவெடுக்கக் கூடும்.

இது இரண்டாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பின் தற்போதைய நிலை.

முதலாம் நிகழ்வின் போது எழுந்த அதே கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

1) பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு, உலகில் யார் வேண்டுமானாலும் தமிழ் எழுத்துகளை என்ன செய்ய வேண்டும் என்று எழுதி தமிழைக் குலைத்துவிட முடியும் என்ற நிலை இருக்கிறது.
அது தமிழர் என்ற பெயரில் இருக்கும் தனி மனிதரோ அல்லது ஓர் அமைப்போ
எதை வேண்டுமானாலும் மாற்றச் சொல்லி, திணிக்கச் சொல்லிக் கேட்கலாம்.
யாரும் மறுக்க வில்லை என்றால் சேர்த்தியமும் அதற்கு உடன்பட்டுப் போய்விடும். ஆர்வலர்கள் கொஞ்சம் தவறவிட்டாலும் தமிழ் தொடர்பான தவறான முன்னீடுகள் கணிமை, இணைய வரலாற்றில் நிரந்தரமாகச் சேர்ந்துவிடும். இந்த நிலையில், தமிழக அரசாங்கத்திற்குத் தெரியாமல் எந்த ஒரு தமிழ் சார்ந்த ஒருங்குறி முன்னீட்டையும் சேர்த்தியம் ஏற்கக் கூடாது என்று ஏன் நாம் இன்னும் நிலைப்பாடு எடுக்கவில்லை?

2) தமிழ் மக்களால் பயன்படுத்தப்படும் கணியில் யாரோ எங்கோ அமர்ந்து கொண்டு இதைத் தூக்கி அங்கே போடு, அதைத் தூக்கி இங்கே போடு என்று சொல்வதும் உடனே தமிழறிஞர்கள் அவர்களுக்கு மறுப்பு சொல்லியே காலம் கழிப்பதும் எத்தனை நாளைக்கு ஆகக்கூடும்?

தவறான முன்னீடுகளைச் செய்து தமது சொந்த நலத்திற்காக மட்டும் ஒரு தமிழர் தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் விளையாட முடியும் என்றால் இது எங்கே போய் முடியும்? இதற்கு முற்றுப் புள்ளியை யார் வைப்பது? எங்கு வைப்பது?

தமிழ் மொழியைச் சீரழிக்கும் போக்குக்கு உடன்போகிறவர்களை எப்படித் தமிழுலகம் தொடர்ந்து ஏற்றுக் கொள்கிறது?

தமிழக அரசாங்கத்தை விட, தமிழறிஞர்களை விட, பழுத்த தமிழ் மன்றங்களை விட, பல்வேறு தமிழக அரசின் தமிழ்த் துறைகளை விட சில தனியர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்களா? அவர்களால் பல கோடி மக்களின் எழுத்துகளின் தலைஎழுத்து தீர்மானிக்கப் படுமா?

தொடர்ந்து வரும் இச்சரவலுக்குத் தீர்வென்ன? எத்தனை நாள் மாரடிக்கப் போகிறோம் இவற்றோடு?

நண்பர்களே, இது இன்றைய, இந்நேரத் தமிழழிப்பாகும். விழித்துக் கொள்ளுங்கள் – அறிவுக் கூர்மையுடன் செயல்படுங்கள் – இல்லாவிட்டால் அழிந்தே போங்கள்! என்று மட்டுமே விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக