வியாழன், 26 மார்ச், 2015

வீரமணியின் “விடுதலைப் பத்திரிக்கையும்” எழுத்து சீர்திருத்த ஆதரவும்

 Posted on

எழுத்து: இரா.சுகுமாரன், செயலர், தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம்

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசுபவர்கள் அனைவரும் பெரியாரின் பெயரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி முன் வைக்கிறார்கள். பெரியாரிடம் இருந்த எவ்வித சமூக அக்கரையுமில்லாமல், ஒரு கணினியை வைத்துக் கொண்டு தம்மைப் பெரியாரை விட அறிவாளிகள் போல் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், பெரியாரைப் போன்று தன்னைப் பற்றி யாரும் நேர்மையாகக் குறிப்பிட்டுக் கொள்வதில்லை.

பெரியார் கும்பகோணம் பச்சையப்பன் கல்லூரியில் 13-01-1936 ஆண்டு எழுத்து சீர்திருத்தம் பற்றி பேசும் போது கீழ்க்கண்டவாறு தம்மைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“மொழி’ என்பது பற்றிப் பேச சிறிதும் அதற்கான அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான் – “மொழி’ என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழித் தத்துவத்திலுள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டேயாகும். நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது, எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கிய, இலக்கணங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. ஆராய்ச்சியாளர் மேற்கோள்களையும் என்னால் காட்ட இயலாது. எனக்குத் தோன்றிய, என் அனுபவத்துக்கு எட்டிய விஷயங்களைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். அவற்றில் பெரும்பாலும், உங்களுக்குக் குற்றமாகப்படலாம். ஆகவே, நான் கூறுவதை நீங்களும், உங்கள் அறிவையும், அனுபவத்தையும் மற்றும் இது விஷயத்தில் அனுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்கள் கருத்தையும் கொண்டு சிந்தித்துப் பார்த்து, ஏற்கக்கூடியதை ஏற்றும், ஏற்கக் கூடாததைத் தள்ளியும் தெளிவு பெற வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு பெரியார் குறிப்பிடும் நிலையில் எழுத்துச் சீர்திருத்தம் பேசும் சிலர் தம்மை ஆய்வறிஞர்களாகவும், தமிழை மேம்படுத்த வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போலக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள், தமிழ் மொழி இன்று உண்மையாகச் சந்தித்து வரும் எவ்வித பிரச்சனைகள் பற்றியும் இவர்களில் பலர் பேசுவதில்லை, கவலைப்படுவதும் இல்லை என்பதோடு அதற்காக எவ்வித செயலையும் செய்யதவர்களாகவும் இருக்கிறார்கள்.  சிலர் தமிழ்மொழி அழிப்பு, இன வெறுப்பாளர்களுடன் கூட்டணி அமைத்தும் செயல்படுகிறார்கள்.

பெரியார், தாம் சொல்வதை அப்படியே எல்லோரும் ஏற்க வேண்டும் என்று ஒரு போதும் சொன்னதில்லை, உங்கள் பகுத்தறிவு கொண்டு நன்றாகச் சிந்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றே பல இடங்களில் குறிப்பிடுகிறார். தமக்கு ஏராளமான பணிகள் உள்ளதாகவும், அதனைத் தாம் வாழ்நாளில் செயல்படுத்திட முடியாமல் போகலாம் என்பதால், கேள்வி கேட்காத சில முட்டாள்களும் தம்முடன் இருந்தால் தாம் சிந்தித்ததை அவர்களை வைத்துச் செயல்படுத்தலாம் என்றும் நினைத்திருந்தார். அவர் நினைத்தது போன்று இன்று “விடுதலைப் பத்திரிக்கை” செயல்பட்டு வருகிறது.

விடுதலை ஏட்டில் 25-02-2015 அன்று மதன் கார்க்கி இந்து பத்திரிக்கையில் சொன்ன பொய்யை விடுதலை ஏடு கண்ணை மூடிக்கொண்டு எதையுமே சோதித்து அறியாமல் அப்படியே வெளியிட்டுள்ளது.

பார்க்க  விடுதலை இணைய இணைப்பு :

http://www.viduthalai.in/headline/96807-2015-02-25-08-58-34.html#ixzz3TOHBPoGU 

 அதன் நகல் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளோம்

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்

இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!

இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை

சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம்  செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங்களில் யுனிக்கோட் எழுத்துருக்கள் சரிவர தெரிவதில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.  பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது.    இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’   கட்டுரையின் தமிழாக்கம் இது).

 “ஒருங்குறியில் (யுனிக்கோட்) முறையில் இன்றளவும் சில குறைபாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங்களில் யுனிக்கோட் எழுத்துருக்கள் சரிவர தெரிவதில்லை.”

என்று குறிபிட்டுள்ளது ஆன்டாய்டு 4.0.4 பதிப்பிலிருந்து தமிழ் மொழிக்கான ஆதரவை கூகுல் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பின்னர் வெளிவந்த எல்லாக் கைபேசிகளிலும் தமிழ் தெளிவாகத் தெரிகிறது. அதே போல ஆப்பிள் நிறுவனமும் தமிழுக்கான வசதிகளை வழங்கியுள்ளது. எளிதாகக் கணினியைப் போன்றே இப்போது பயன்படுத்த முடிகிறது. அதை அறியாமல் தவறான கருத்தை முன்வைக்கிறார்கள்.

பெரியார் அன்று அச்சு ஊடகங்களுக்கு வசதியாகவே எழுத்து மாற்றம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் என்ற கோரிக்கையானது ஒரு போதும் தமிழ் மொழியைச் சீரழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் சொல்லத் தொடங்கும் முன்பே நீங்கள் சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்றைய “விடுதலையோ” எழுத்துச் சீர்திருத்தம் என்று சொல்லிவிட்டாலே போதும் அது சரியா, பொருத்தமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. உடனே பெரியார் சொல்லிவிட்டார் என்றும், வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்து எழுதிவருகிறது. ஆனால், அறிவு கொண்டு சிந்தியுங்கள் என்று பெரியார் சொன்னதை “விடுதலை” ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

எனவே, இனி எழுத்துச் சிதைப்பு போன்ற செயலுக்கு “விடுதலை”  ஆதரவு வழங்கும் போது பெரியார் சொன்னது போல “அதற்கு வேண்டிய இலக்கிய, இலக்கணங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை.” என்பது போன்ற முகப்புச் செய்தியுடன் இனி ஆதரவு வழங்கினால் நல்லது என்று நினைக்கிறேன்.

மொழியியல் துறையிலும், கணினித் துறையிலும் அறிவுடையவர்களை மட்டுமே வைத்து இது போன்ற செய்திகளை எழுதுவது நல்லது. இல்லையெனில், பெரியாரே நினைத்துப் பார்க்காத “திராவிடர் கழகம்” என்பதை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதாகவே எம்மைப் போன்றோர் கருதுவர்.

எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எல்லாவிதமான பரிந்துரைகளையும் உடனே ஆதரிக்கும் “விடுதலை ஏடு”: தனது பத்திரிக்கையை மேலே உள்ள படத்தில் மதன் கார்க்கி பரிந்துரைத்த  “க” “க” எனும் வடிவிலான  எழுத்து மாற்ற (சீர்திருத்த?) முறையில் தனது பத்திரிக்கை முழுவதும் உடனடியாக வெளியிட தயாரா? அப்படி வெளியிட்டால் அந்தப் பத்திரிக்கை எங்கே தூக்கி வீசப்படும் என்பதை விடுதலை சேதித்து அறிந்து கொண்டால் நல்லது.

இன்று வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தில் எழுத்துக்களை மாற்றினால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்தது விடும் என்று சொல்லிவிட முடியாது. வேறு பல வழிகள் உள்ளது அதிலும் விடுதலை கவனம் செலுத்துவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக