வெள்ளி, 15 நவம்பர், 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? : பேரா. தெய்வசுந்தரம் பதில்

Posted on

(ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? – ஜெயமோகன், எழுத்தாளர் அவர்களின் இந்து செய்திஏட்டுக்  கட்டுரைக்கு பதிலாக)

ஒரு மொழியின் எழுத்துகள் – வரிவடிவம் – என்பது  அம்மொழியில் பயன்படும் அனைத்து பேச்சு ஒலிகளுக்குமான (phones)  குறியீடுகள் இல்லை.

பொருள் வேறுபாட்டை ( meaning differentiation)  உணர்த்தவே பேச்சொலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பேச்சொலிகள் தாமாகவே பொருளை வெளிப்படுத்துவதில்லை. வேறுபடுத்துவதில்லை.  அவை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் (structured) அமைந்து – ஒலியன்களாக ( Phoneme) , அசைகளாக (Syllable)  – அமைந்துதான் பொருளை வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தமுடியும்.
அக்குறிப்பிட்ட கட்டமைப்பை வெளிப்படுத்துவதுதான் எழுத்துகள் ( Grapheme) . அக்கட்டமைப்புக்குத்தான் எழுத்துகள்  அமைகின்றன. எடுத்துக்காட்டாகத் தமிழில் கடல், தங்கம், பகல் என்ற மூன்று சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் முதல் சொல்லில் உள்ள க் , இரண்டாவது சொல்லில் உள்ள க், மூன்றாவது சொல்லில் உள்ள க் ஆகிய மூன்றும் வெவ்வேறு பேச்சொலிகள். இவை மூன்றும் ஒரே இடத்தில் வராது ( Complimentary distribution) . ஆனால் இம்மூன்றுக்கும் ஒரே எழுத்துதான். ஆனால் இந்தியில் இவற்றிற்கு வெவ்வேறு எழுத்துகள். இதற்குக்க காரணம் தமிழில் இந்த மூன்று பேச்சொலிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  உறுப்பினர்கள் –  மாற்றொலிகள் ( Allophones) . ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. வந்து பொருள் வேறுபாட்டைத் தராது. ஆனால் இந்தியில் இந்த மூன்றும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே இடத்தில் வந்து, பொருள் வேறுபாட்டைத் தரும். அதாவது தனித்தனி ஒலியன்கள் ( Phonemes) . எனவேதான் இந்தியில் அவற்றிற்குத் தனித்தனி எழுத்துகள். தமிழில் அவற்றிற்கு ஒரே எழுத்து.
தமிழில் ஒவ்வொரு ஒலியனுக்கும் – 12 உயிர், 18 மெய் – எழுத்துகள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்த கட்டமாக,  ஒலியன்கள் அசைகளாக அமைகின்றன. ஒரு சொல்லை உச்சரிக்கும்போது எத்தனை தடவை வாய் திறக்கப்பட்டு, காற்றுக்கொத்து ( air puff)  வெளிவருகிறதோ, அத்தனை அசைகள் அச்சொல்லில் உண்டு. காற்றுக்கொத்து வெளிவரும்போது உயிர் ஒலி  பிறக்கும். அதற்குத் துணையாக முன்னும் பின்னும் மெய் ஒலிகள் அமையலாம். மெய் ஒலியைத் தனியாகப் பிறப்பிக்கமுடியாது. ஆனால் உயிர் ஒலியைத் தனியாகப் பிறப்பிக்கமுடியும்.  அக்கா என்ற சொல்லில் வாய் இரண்டு தடவை ( அக்-கா) திறக்கிறது. எனவே இரண்டு அசைகள். முதல் அசையில்  அ ( உச்சி – peak)  – க் (ஒடுக்கம் – coda)   என்ற இரண்டும் அசையின் உறுப்புகள்.  இரண்டாவது அசையில் க் ( தொடக்கம் – onset) – ஆ (உச்சி)  என்ற இரண்டும் அசையின் உறுப்புகள். 
 
தமிழில்  அசையின் உச்சிகளுக்குத் ( உயிர்களுக்கு)தனி எழுத்துகள் . அசையின் ஒடுக்கத்திற்கு (மெய்களுக்கு) தனி எழுத்துகள். இதுபோக,  தொடக்கம் , உச்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொகுதிகளுக்கும் ( உயிர்மெய்கள்) எழுத்துகள். உயிர்மெய் எழுத்துகளை அசை எழுத்துகள் ( syllabic scripts) என்று அழைக்கலாம். தனித்தோ அல்லது மெய்யோடு இணைந்தோ காற்றுக்கொத்து வெளியிடப்படும்போது , அதற்கென்று எழுத்துவடிவம் அமைந்துள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும். அசையின் தொடக்கம், உச்சி, ஒடுக்கம் ஆகியவை தனித்தனி ஒலியன்களாகும். தொடக்கமும் உச்சியும் இணைந்தது அசையாகும். 
 
அசையானது ஒடுக்கம் இல்லாமலும் ( மெய் )  முடியலாம்.  ஒடுக்கத்தோடும் ( மெய்)  முடியலாம். 
எனவே தமிழின் எழுத்துவடிவங்கள் ஒலியன், அசை என்ற அமைப்புகளை – கட்டுக்கோப்புகளை-  வெளிப்படுத்தும் ஒரு குறியீடு. பொருளற்ற குறியீடு அல்ல.
 
மேலும் தமிழில் எழுத்துவடிவத்திற்கும் உச்சரிப்புக்கும்  மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்கமுடியும். ஆங்கில எழுத்துமுறை வேறு.  எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு எழுதுவதை அப்படியே உச்சரிக்கமுடியாது. உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ளவேண்டும். எனவேதான் டானியல் ஜோன்ஸ், கிம்சன் போன்றோர் ஆங்கிலத்திற்குத் தனியே உச்சரிப்பு அகராதி வெளியிட்டுள்ளார்கள். தமிழுக்கு மாற்றொலி விதிகளைக் கற்றுக்கொடுத்தால் போதும்.
இவ்வாறு தெளிவான அமைப்பு அடிப்படை தமிழுக்கு இருக்கும்போது, ரோமன் எழுத்தில் தமிழை எழுதவேண்டும் என்று சொல்வது   உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பது போலாகும்.  அவற்றை இயக்கும் உயிரை கவனத்தில் கொள்ளாத போக்காகும். இதயமோ, நுரையீரலோ , சிறுநீரகமோ வெறும் உறுப்புகள் அல்ல. உயிரை இயக்குவதற்காக – அதற்கேற்றவாறு – அமைந்துள்ள உறுப்புகளாகும்.
அதுபோன்றே  ஒரு மொழியின் எழுத்துகள். இந்த அடிப்படையை மனதில் கொள்ளாமல், ரோமன் எழுத்தில் தமிழை எழுதச் சொல்வதோ அல்லது தன் விருப்பத்திற்கு எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் கருத்துகளை முன்வைப்பதோ தவறு. கண்ணை வெட்டிக் காலில் வைக்கமுடியாது. காலை வெட்டித் தலையில் வைக்கமுடியாது. 
பேசுவதை அப்படியே எழுதுவது என்பது மொழியியல் ஆய்வுக்குத் தேவைப்படும். அதற்குப் பன்னாட்டு ஒலியியல் கழகம் ( International Phonetic Association)  உருவாக்கியுள்ள பேச்சொலி எழுத்துகள் ( IPA scripts)உள்ளன.  அதைப் பயன்படுத்தலாம்.
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்