வியாழன், 26 மார்ச், 2015

வீரமணியின் “விடுதலைப் பத்திரிக்கையும்” எழுத்து சீர்திருத்த ஆதரவும்

 Posted on

எழுத்து: இரா.சுகுமாரன், செயலர், தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம்

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசுபவர்கள் அனைவரும் பெரியாரின் பெயரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி முன் வைக்கிறார்கள். பெரியாரிடம் இருந்த எவ்வித சமூக அக்கரையுமில்லாமல், ஒரு கணினியை வைத்துக் கொண்டு தம்மைப் பெரியாரை விட அறிவாளிகள் போல் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், பெரியாரைப் போன்று தன்னைப் பற்றி யாரும் நேர்மையாகக் குறிப்பிட்டுக் கொள்வதில்லை.

பெரியார் கும்பகோணம் பச்சையப்பன் கல்லூரியில் 13-01-1936 ஆண்டு எழுத்து சீர்திருத்தம் பற்றி பேசும் போது கீழ்க்கண்டவாறு தம்மைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“மொழி’ என்பது பற்றிப் பேச சிறிதும் அதற்கான அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான் – “மொழி’ என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழித் தத்துவத்திலுள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டேயாகும். நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது, எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கிய, இலக்கணங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. ஆராய்ச்சியாளர் மேற்கோள்களையும் என்னால் காட்ட இயலாது. எனக்குத் தோன்றிய, என் அனுபவத்துக்கு எட்டிய விஷயங்களைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். அவற்றில் பெரும்பாலும், உங்களுக்குக் குற்றமாகப்படலாம். ஆகவே, நான் கூறுவதை நீங்களும், உங்கள் அறிவையும், அனுபவத்தையும் மற்றும் இது விஷயத்தில் அனுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்கள் கருத்தையும் கொண்டு சிந்தித்துப் பார்த்து, ஏற்கக்கூடியதை ஏற்றும், ஏற்கக் கூடாததைத் தள்ளியும் தெளிவு பெற வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு பெரியார் குறிப்பிடும் நிலையில் எழுத்துச் சீர்திருத்தம் பேசும் சிலர் தம்மை ஆய்வறிஞர்களாகவும், தமிழை மேம்படுத்த வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போலக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள், தமிழ் மொழி இன்று உண்மையாகச் சந்தித்து வரும் எவ்வித பிரச்சனைகள் பற்றியும் இவர்களில் பலர் பேசுவதில்லை, கவலைப்படுவதும் இல்லை என்பதோடு அதற்காக எவ்வித செயலையும் செய்யதவர்களாகவும் இருக்கிறார்கள்.  சிலர் தமிழ்மொழி அழிப்பு, இன வெறுப்பாளர்களுடன் கூட்டணி அமைத்தும் செயல்படுகிறார்கள்.

பெரியார், தாம் சொல்வதை அப்படியே எல்லோரும் ஏற்க வேண்டும் என்று ஒரு போதும் சொன்னதில்லை, உங்கள் பகுத்தறிவு கொண்டு நன்றாகச் சிந்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றே பல இடங்களில் குறிப்பிடுகிறார். தமக்கு ஏராளமான பணிகள் உள்ளதாகவும், அதனைத் தாம் வாழ்நாளில் செயல்படுத்திட முடியாமல் போகலாம் என்பதால், கேள்வி கேட்காத சில முட்டாள்களும் தம்முடன் இருந்தால் தாம் சிந்தித்ததை அவர்களை வைத்துச் செயல்படுத்தலாம் என்றும் நினைத்திருந்தார். அவர் நினைத்தது போன்று இன்று “விடுதலைப் பத்திரிக்கை” செயல்பட்டு வருகிறது.

விடுதலை ஏட்டில் 25-02-2015 அன்று மதன் கார்க்கி இந்து பத்திரிக்கையில் சொன்ன பொய்யை விடுதலை ஏடு கண்ணை மூடிக்கொண்டு எதையுமே சோதித்து அறியாமல் அப்படியே வெளியிட்டுள்ளது.

பார்க்க  விடுதலை இணைய இணைப்பு :

http://www.viduthalai.in/headline/96807-2015-02-25-08-58-34.html#ixzz3TOHBPoGU 

 அதன் நகல் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளோம்

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்

இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!

இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை

சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம்  செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங்களில் யுனிக்கோட் எழுத்துருக்கள் சரிவர தெரிவதில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.  பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது.    இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’   கட்டுரையின் தமிழாக்கம் இது).

 “ஒருங்குறியில் (யுனிக்கோட்) முறையில் இன்றளவும் சில குறைபாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங்களில் யுனிக்கோட் எழுத்துருக்கள் சரிவர தெரிவதில்லை.”

என்று குறிபிட்டுள்ளது ஆன்டாய்டு 4.0.4 பதிப்பிலிருந்து தமிழ் மொழிக்கான ஆதரவை கூகுல் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பின்னர் வெளிவந்த எல்லாக் கைபேசிகளிலும் தமிழ் தெளிவாகத் தெரிகிறது. அதே போல ஆப்பிள் நிறுவனமும் தமிழுக்கான வசதிகளை வழங்கியுள்ளது. எளிதாகக் கணினியைப் போன்றே இப்போது பயன்படுத்த முடிகிறது. அதை அறியாமல் தவறான கருத்தை முன்வைக்கிறார்கள்.

பெரியார் அன்று அச்சு ஊடகங்களுக்கு வசதியாகவே எழுத்து மாற்றம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் என்ற கோரிக்கையானது ஒரு போதும் தமிழ் மொழியைச் சீரழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் சொல்லத் தொடங்கும் முன்பே நீங்கள் சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்றைய “விடுதலையோ” எழுத்துச் சீர்திருத்தம் என்று சொல்லிவிட்டாலே போதும் அது சரியா, பொருத்தமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. உடனே பெரியார் சொல்லிவிட்டார் என்றும், வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்து எழுதிவருகிறது. ஆனால், அறிவு கொண்டு சிந்தியுங்கள் என்று பெரியார் சொன்னதை “விடுதலை” ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

எனவே, இனி எழுத்துச் சிதைப்பு போன்ற செயலுக்கு “விடுதலை”  ஆதரவு வழங்கும் போது பெரியார் சொன்னது போல “அதற்கு வேண்டிய இலக்கிய, இலக்கணங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை.” என்பது போன்ற முகப்புச் செய்தியுடன் இனி ஆதரவு வழங்கினால் நல்லது என்று நினைக்கிறேன்.

மொழியியல் துறையிலும், கணினித் துறையிலும் அறிவுடையவர்களை மட்டுமே வைத்து இது போன்ற செய்திகளை எழுதுவது நல்லது. இல்லையெனில், பெரியாரே நினைத்துப் பார்க்காத “திராவிடர் கழகம்” என்பதை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதாகவே எம்மைப் போன்றோர் கருதுவர்.

எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எல்லாவிதமான பரிந்துரைகளையும் உடனே ஆதரிக்கும் “விடுதலை ஏடு”: தனது பத்திரிக்கையை மேலே உள்ள படத்தில் மதன் கார்க்கி பரிந்துரைத்த  “க” “க” எனும் வடிவிலான  எழுத்து மாற்ற (சீர்திருத்த?) முறையில் தனது பத்திரிக்கை முழுவதும் உடனடியாக வெளியிட தயாரா? அப்படி வெளியிட்டால் அந்தப் பத்திரிக்கை எங்கே தூக்கி வீசப்படும் என்பதை விடுதலை சேதித்து அறிந்து கொண்டால் நல்லது.

இன்று வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தில் எழுத்துக்களை மாற்றினால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்தது விடும் என்று சொல்லிவிட முடியாது. வேறு பல வழிகள் உள்ளது அதிலும் விடுதலை கவனம் செலுத்துவது நல்லது.

திங்கள், 3 நவம்பர், 2014

ஒருங்குறி பேணல் – தொடரும் தவறுகளும் இருக்கும் இடைவெளிகளும்

 தமிழ் ஒருங்குறி என்பது தொலைநோக்குடன் நெடுநாள் பேணப்பட வேண்டிய ஒன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பு, இதன் துவக்கக் காலத்தில் கவனமில்லாமல்  இருந்ததால், தமிழ் ஒருங்குறி பல ஊனத்தோடு நம்மிடையே வந்து சேர்ந்தது.
தொடர்ந்த கவனமும், பேணுதற்கான நெறிமுறையும்  இல்லாததால் 2010ல் பெரிய ஆபத்துகளைத் தமிழ் ஒருங்குறி சந்தித்தது. அதொடு, சில தனிமாந்தர்களின் விருப்பு வெறுப்புக் களமாக தமிழ் ஒருங்குறி ஆகிப்போனது. அதன்பின் ஆண்டுகள் நான்கு ஆகியிருக்கும் தற்காலத்திலும் அதே நிலை தொடர்கிறது. காட்டாக, தற்போது ஒருங்குறியில் சேர்க்க இருக்கும் 55 புதிய குறியீடுகளைத் தமிழ் நாட்டின் தமிழ்த்துறை அறிஞர்கள், வல்லுநர்கள் ஒருமுறை கூட சரியா, தவறா என்று பார்க்கவில்லை. கட்டுப்பாடற்ற, நெறிமுறைகளற்ற தனிமாந்தச் செயற்பாடுகளாகவே ஒருங்குறிப்பணிகள் தொடர்கின்றன. இது குறித்த கவலையையும், ஆய்வையும், சில பரிந்துரைகளையும் உள்ளடிக்கிய தொகுப்பாக இம்மடல் வரையப்பெற்று தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மடலையும், கட்டுரையையும் இங்கேக் காணலாம்.

  நாக.இளங்கோவன், கணிஞர் (nelango5@gmail.com)

                                                                                      நாள்: 16/செப்/2014

பெறுநர் 

திரு. தா.கி.இராமச்சந்திரன், ..

அரசுச் செயலாளர், தகவல் நுட்பியல் துறை,

தலைமைச் செயலகம், சென்னை-9

பொருள்: ஒருங்குறி பேணலில் தொடரும் குறைகள், இருக்கும் இடைவெளிகள் பற்றிய ஆய்வும், தேவையான
அரசு நெறிமுறைகள் பற்றிய கவன ஈர்ப்பும்

மேற்கோள்
ஆவணங்கள்
: கீழ்க்கண்ட அட்டவணைகள் 1 & 2

அட்டவணை-1:

அட்டவணை-1:

பொருள் எண்

ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு  அனுப்பப்பட்ட ஆவணம்

ஆவண ஆசிரியர், நாள்

1

http://www.unicode.org/L2/L2012/12231-tamil-fractions-symbols-proposal.pdf

இரமணசர்மா ,17/சூலை/12

2

http://www.unicode.org/L2/L2013/13028-script-rept.pdf

சேர்த்தியம், 25/சன/13

3

http://www.unicode.org/L2/L2013/13047-tamil-frac-rev.pdf

இரமணசர்மா, 05/மார்ச்/13

4

http://www.unicode.org/L2/L2013/13161-tamil-frac-names.pdf

.., 24/சூலை/13

5

http://www.unicode.org/L2/L2013/13175-tamil-frac-name.pdf

இரமணசர்மா, 09/ஆக/13

6

http://www.unicode.org/L2/L2013/13077-cmt-tamil-fractions.pdf

நா.கணேசன், தேதியிடாதது)

7

http://www.unicode.org/L2/L2014/14037-tamil-frac-spell.pdf

மணிவண்ணன் , (தேதியிடாதது)

8

http://www.unicode.org/L2/L2014/14038-tvu-letter.pdf

.. , 28/சன/14

9

http://www.unicode.org/L2/L2014/14048-srilanka-comments.pdf

கிகன்டையசு (இலங்கை), 30/சன/14

10

http://www.unicode.org/L2/L2014/14018-tamil-fractions-spelling.pdf

இரமணசர்மா, 20/திச/13

11

http://www.unicode.org/L2/L2014/14160-tamil-fractions-reply-to-icta.pdf

இரமணசர்மா 18/சூலை/14

12

http://www.unicode.org/L2/L2014/14210-tamil-vu-letter.pdf

நக்கீரன் 06/ஆக/14

13

http://www.unicode.org/L2/L2014/14212-tamil-names.pdf

வாசு அரங்கநாதன் (தேதியிடாதது)

அட்டவணை-2:

பொருள் எண்

ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்ட ஆவணம்

ஆவண ஆசிரியர், நாள்

1

http://www.unicode.org/L2/L2009/09376-tamil-major-fractions.pdf

இரமணசர்மா, 25/அக்/09

2

http://www.unicode.org/L2/L2010/10318-tamil-nadu.pdf

தமிழக அரசாணை, எண் 26, 23/சூன்/10

3

http://www.unicode.org/L2/L2010/10334-tamil-fractions.pdf

இரமணசர்மா, 09/செப்/10

4

http://www.unicode.org/L2/L2010/10408-infitt-tamil-frac.pdf

நா.கணேசன், 19/அக்/10

5

http://www.unicode.org/L2/L2010/10428-tamil-fractions.pdf

இரமணசர்மா, 22/அக்/10

 மதிப்பிற்குரிய ஐயா,

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன், தங்களுக்கு அனுப்பிய 06.08.2014 தேதியிட்ட மடலை, ஒருங்குறிச் சேர்த்திய ஆவணப் பதிவில் நான் கண்டேன் (அட்டவணை-1, எண்:12). அதைத் தொடர்ந்து தமிழ் ஒருங்குறிப் பட்டியலிற் பின்னங்கள், சின்னங்களுக்கான குறியீடுகளைச் சேர்ப்பது தொடர்பான ஆவணங்களையும் கடிதங்களையும் கண்ணுற்றேன். இது அடிப்படையில் நல்ல முயற்சி. இக்குறியீடுகள் மட்டுமல்லாது வரும்நாட்களில் தமிழில் மேலுமுள்ள பல சின்னங்களும், குறியீடுகளும் ஒருங்குறியில் சேர்ப்பதற்குத் தாங்கள் ஊக்கம் அளிக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

அதே நேரத்தில், தற்போதைய பின்னங்கள், சின்னங்களுக்கான இந்த ஆவணங்களைக் கண்ணுற்றதில் எனக்கு ஏற்பட்ட ஐயங்கள், புலப்படும் குறைகள், இடைவெளிகள் ஆகியவற்றைத் தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டுவருவதும், அவற்றிற்குத் தேவையான நெறிமுறைகளை அரசு சார்பாக தாங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதும் இம்மடல் வாயிலாக எனது நோக்கமாகும்.

55 முதல் 62 குறியீடுகள் வரை பேசும் 15-20 ஆவணங்களை நான் மீள்பார்வை (Review) செய்தபோது எனக்குப் புலப்பட்ட முக்கிய கருத்துகள் மூன்று:

  1. திரு.இரமணசர்மாவின் மூல ஆவணம் (அட்டவணை-1, எண்:1) முறையாக, முழுமையாக தமிழக அரசினாலும், தமிழ்நாட்டறிஞர்களாலும் ஆழ்ந்து மீள்பார்வை செய்யப்படவில்லை.
  2. பல வெளிநாட்டு அறிஞர்களின் சான்றாதாரங்களை உள்வாங்கியிருக்கும் இவ் ஆவணத்தில், உள்ளடக்கம் (content), குறியீடுகளின் வரைவுகள் (definitions), வடிவங்கள் (shapes), அவற்றின் வழக்கு மாறுபாடுகள் (differences in practice), காலங்கள் (timing) போன்றவை மீள்பார்வைக்கே உள்ளாக்கப்படாமல், வெறுமே, குறிப்பிட்ட “சின்னங்களின் தமிழ்ப்பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது?” என்பதோடு மட்டும் மீள்பார்வை நின்றுபோனது அதிர்ச்சியை அளிக்கிறது.
  3. ஒருங்குறி பேணலில், 2010ஆம் ஆண்டு பெரிய சரவல்கள் ஏற்பட்டிருந்தபோதிலும், அதில் இருந்து பாடங்களை எடுத்துக்கொண்டு, தக்க பேணல் நெறிமுறைகளை இதுவரை உருவாக்காததையும் தெள்ளெனக் காட்டுகிறது.

இம்மூன்று கருத்துகளையும், மிகச்சில எடுத்துக் காட்டுகளைச் சொல்லி விளக்குவேன்.

குறைகளும் இடைவெளிகளும்:

  1. தமிழக அரசாணை எண்-26 இல், (அட்டவணை-2, எண்-2) பின்னங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறியீட்டு வடிவங்களும், அதே பின்ன எண்களுக்குத் திரு.இரமணசர்மாவின் முன்னீட்டிற் தற்போது காணப்படும் குறியீட்டு வடிவங்களும் பெரும் வேறுபாடுகளைக் கொன்டுள்ளன.
பின்னம் த.நா அரசாணை-26ன்படி இரமணசர்மா முன்னீட்டு வடிவம்
1/16
1/32
1/5
  1. இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் பின்னக் குறியீட்டு வேறுபாடுகள் சிலவே. இன்னும் பல குறியீடுகளில், தெளிவாகத் தெரியும் மெல்லிய, திண்ணிய வடிவ மாற்றங்கள் தென்படுகின்றன. தமிழக அரசாங்கம் தன் அரசாணை வழியே வெளியிட்டிருக்கும் குறியீடுகளை, தேவையான ஆய்வும், ஆழ்ந்த மீள்பார்வையும் இல்லாது பன்னாட்டுச் சேர்த்தியத்திற்கு அனுப்பும் ஆவணத்தில் (கிட்டத்தட்டத் தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்தது போல்) மாற்றிவிடுதல் ஏற்புடையதா? ஆவணத்தில் உள்ள குறியீடுகளுக்கு முன்வைக்கப்படும் வடிவங்கள், அவற்றிற்கான விளக்கங்கள் போன்றவை, தக்க துறைசார்ந்த, நாட்டு வழமை தெரிந்த அறிஞர்களால் ஆராயப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இப்படியான உள்ளடக்க (content) ஆராய்ச்சி ஏதுமே செய்யாமல், ”எல்லாம் சரியாக இருக்கிறது; இந்தக்குறியீடுகளைச் சேர்ப்பதில் தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் மகிழ்ச்சி அடைகிறது” என்று கடிதம் எழுதியிருப்பது பெரிதும் வருந்தத்தக்கது (அட்டவணை-1, எண்:4).
  2. 1/8 – அரைக்கால் பின்னத்திற்கான குறியீட்டு வடிவம்
    தமிழக அரசாணையுடன் வேறுபட்டிருப்பதோடு, அதன் தேர்வும் தவறானதாய்த் தோற்றுகிறது. திரு.இரமணசர்மாவின் ஆவணத்தில்(அட்-1 எண்-1, பக்-9) அவர் காட்டியிருக்கும் சான்றாதாரங்களில் பெரும்பாலானவை அவரின் தேர்விற்கு மாறாகவே இருக்கின்றன. “ஆழாக்குக் குறியீட்டு வடிவத்தோடு குழப்பம் வரும்” என்ற காரணம் ஏற்கக்கூடியதல்ல. அப்படிக் குழப்பம் வராமலேயே, பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின்படி அந்த வடிவத்தைச் செய்யமுடியும். இந்த முக்கியக் குறியீட்டு வடிவம் அவசியம் மீள்பார்வைக்கு உட்பட வேண்டும்.
  3.  ½ – அரை பின்னத்தின் குறியீட்டு வடிவத்தின் () தேர்வும் தவறானது (அட்-1 எண்-1, பக்கம் 9, 28). “பண்டைத் தமிழ் எழுத்துக்கள்” என்ற நூலில் தி.நா.சுப்பிரமணியன் அவர்கள், (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பதிப்பு-2011, பக்கம் 97-98) குறிப்பிட்டிருக்கும் என்ற வரிவடிவம் கி.பி.1204 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் சாசனங்களில் காணப்படும் வடிவமாகும். ஆனால், திரு.இரமணசர்மா தேர்ந்தெடுத்திருப்பது, 19-20 ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட வரிவடிவமேயாகும். இவ்வரிவடிவம் மணிப்பவள காலத்தில் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. தமிழ் ஆவணங்களிலும் கிரந்த ஆவணங்களிலும் காணப்படும் இவ்வரிவடிவம் முக்கியமான மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். அதொடு, இம்மாதிரி, தொன்மையான சின்னங்களும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றொரு வடிவமும் காணப்படும் சூழலில், ஒன்றையொன்று அழித்துவிடுவது போற் குறியீடு செய்தால், அது மிகப்பெரிய தவறாகிவிடும். இக்குறியீட்டின் நோக்கமே தொன்மையை கணினிக்குள் உள்வாங்குவதாகும். இப்படி ஒன்றையொன்று அழிக்குமாறு செய்யாமல், இரண்டில் ஒன்றை “ஏன் தேர்வுசெய்யவேண்டும்?” என்ற விரிவான ஆய்வைச் செய்யவேண்டும். அல்லது இரண்டையும் உள்வாங்கும் வழிமுறையைக் காணவேண்டும். ஆகவே, இப்போதுள்ள குறைவான ஆய்வில் இக்குறியீடு தவிர்க்கப் படவேண்டியதாகும். முறையான உள்ளடக்க மீளாய்வு ஏற்பட்டிருக்குமானால் தமிழக ஆய்வு நிறுவன அறிஞர்கள் இதனைச் சுட்டிக்காட்டியிருப்பர்.
  4. குழி – இப்பரப்பளவிற்குத் திரு.இரமணசர்மா குறிப்பிட்டிருக்கும் விளக்க வரைவு போதுமானதல்ல. 1 குழி = 16 ச.கசம் என்ற வரைவு தவறானது. 1 குழி = 144 ச.அடி என்ற அளவையை எடுத்துக் கொண்டு, அதை ச.கசமாக அவர் மாற்றியிருக்கிறார். 100 ச.அடி என்ற சான்றாதாரத்தையும் அவரே ஒப்பிடுகிறார் (அட்-1 எண்-1, பக்-5, 15). ஆனால், தொன்று தொட்டு, சிலப்பதிகார காலத்திலிருந்து குழி என்பது 121 ச.அடி (11 x 11) என்பதே அறிஞர் முடிபு. இதுபற்றி, ஒய்.சுப்பராயுலு அவர்களின் “Land Measurements in Medieval Tamilnadu” என்ற கட்டுரையை மேற்கோள் காட்டும் “பழந்தமிழர் நீட்டளவை – 5” என்ற முனைவர்.இராம.கி அவர்களின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. அதில் பெருங்கோல் அடிப்படையிலான தண்டச் சதுரம் என்னும் பரப்பளவை, தமிழகத்தில் பெரும்பான்மைப் புழக்கதிலிருந்தது (57%) என்று மாவட்டவாரியாக குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் காணத்தக்கது (http://valavu.blogspot.in/2009/07/5.html). ஆகவே, குழி என்பதற்கான திரு.இரமணசர்மா அவர்களின் வரைவும் விளக்கங்களும் மேலாய்வு செய்யப்பட்டு தக்க மாற்றங்கள் செய்யப்படவேண்டியதாகும். அதுமட்டுமல்ல, இது எதைக் காட்டுகிறதென்றால், இந்த முன்னீடு (proposal), தமிழக நிலப்பிரிவுகளில் வழங்கும் பல்வேறு வழக்குகளை முற்றுமுழுதாக உள்வாங்கவில்லை என்பதாகும். தொன்றுதொட்டு, தமிழகத்திற் பகுதிக்குப் பகுதி சில வழக்குத் திரிவுகள் இருந்திருக்கின்றன. தமிழெழுத்துகளை ஒருங்குறிக்குக் கொண்டுபோகும் போது தற்கால வழக்கை அப்படியே எடுத்துக் கொள்வது சரியாக இருக்கலாம். ஆனாற் பழந்தொன்மங்களுக்கான குறியீடுகளை ஒருங்குறிக்குள் கொண்டுசெல்லும் போது, பிற்கால வழக்கில் ஏதோவொன்றை மட்டும் எடுத்துக்கொள்வது சரியாகாது. அவை சரியான தொன்மக் குறியீடுகளாக, வரைவுகளாக இருக்கமுடியா. பல்வேறு ஆராய்ச்சிகளோடு வழக்குத்திரிவுகளும் ஆராயப்பட்டு உள்வாங்கப்படவேண்டும். அவை ஆவணப்படுத்தப்படவேண்டும். இதைத் திரு.இரமணசர்மா செய்ய விட்டிருந்தாலும், அவ்வாவணத்தை, முறையாகத் தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களின் அறிஞர்கள் மீள்பார்வை செய்திருந்தால் இக்குறை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
  5.  நம்பர் – இதற்கான வரிவடிவத்தை திரு.இரமணசர்மா தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் தன்னிச்சையானது(அட்-1 எண் 1, பக்-24). குருநேண்டால் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வரிவடிவமே இன்றைக்கும் பயன்படுத்தும் வரிவடிவமாகும். இற்றை நிலப்பதிவுப் பத்திரங்களைப் பார்த்தாலே இது தெள்ளெனப்புரியும் (நிர்). நூல்களில் மட்டுமே தொன்மங்களுக்கான சான்றாதாரங்களை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதல்ல. அதுமட்டுமல்ல, நிலுவை என்ற குறியீட்டின் வரிவடிவத்துக்கும், குருநேண்டால் சொல்லும் நம்பர் வரிவடிவத்துக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. அவையிரண்டும் தெளிவான வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, திரு. இரமணசர்மா வைக்கும் இந்த வரிவடிவ முன்னீடு தவறாகவே இருக்கிறது. இதுவும் தக்க துறைசார்ந்த அறிவர்களின் மீளாய்வு இல்லாததால் இம்முன்னீட்டில் நம்பர்க்கான வரிவடிவம் திணிக்கப்படுவது தெளிவாகும். அதுமட்டுமல்ல, இதுவும் தமிழக அரசாணையில் இருந்து தெளிவான விளக்கங்களின்றி வேறுபட்டிருக்கிறது.
  6.  பிள்ளை – இதற்கான விளக்கமாய் “ஒரு தகுதி” என்ற சொல் திரு.இரமணசர்மாவின் ஆவணத்திற் கொடுக்கப்பட்டுள்ளது. “a title”, “caste title” என்ற இரண்டு பொருள்கள் ஆவணத்திற் காணப்படுகிறது. இதற்கு ஒரு வரிவடிவம் இருப்பதை நூலாதாரத்தில் திரு.இரமணசர்மா எடுத்துக்காட்டுகிறார். “குறிப்பிடப்படுவது ஒரு சாதியா, அன்றித் தகுதியா?” என்ற விளக்கம் இன்னும் தெளிவாக இருக்கவேண்டும். எதுவாக இருந்தாலும், இதற்கு நூலாதாரப் பொருளும் வரிவடிவமும் மட்டும் போதாது. பயன்பாட்டுச் சான்றாதார அடிப்படையிலேயே இது தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பயன்பாட்டுச் சான்றாதாரம் வலுவாக இல்லாவிடில் இக்குறியீடு தவிர்க்கப்படவேண்டும்.
  7. பைசா – (அட்-1 எண்-1, பக்-5, 14) என்பதற்கு மூன்று வித வரிவடிவங்களை வரலாற்றாசிரியர்கள் இதுவரை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். “பை” என்ற குறியீடு இன்றைக்கும் பயனிலுள்ளது. இதுதவிர வேறிரண்டை நூல்கள் காட்டுவதை திரு.இரமணசர்மா ஆவணப்படுத்தி-யிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டுமே பைசாவைக் குறிப்பிடத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மீண்டும் சொன்னால், இது தவறான அணுகுமுறையாகும். மூன்றில் ஒன்றை பொத்தாம் பொதுவில் தேர்ந்தெடுப்பது சரியான முறை அல்ல. பழைய ஆவணங்களிலிருந்து, பயன்பாட்டு ஆய்வு (frequency analysis) செய்து உண்மைகளைக் கண்டறிந்து அதன்பின் முடிவெடுப்பதுதான் சரியாகும். ஏதோவொன்றிருக்கட்டும் என்ற அணுகுமுறை, தொன்மங்களைக் குறியீடு செய்தற்குப் பொருந்தாது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஆவணத்திற்கு ஆவணம் வேறுபட்ட குறியிருந்தால், பழம் ஆவணங்களை எண்மயஞ் செய்யும்போது, தற்போது தேர்ந்தெடுத்திருக்கிற குறியீட்டை வைத்து விட்டு உண்மையான ஒன்றை அழிப்பதுபோல் ஆகிவிடும். இது, தொன்ம ஆவணங்களைக் கணிமைப் படுத்துதலின் நோக்கத்தைக் குலைத்துவிடும். இந்தக் கருத்து, ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மேலும் பல குறியீடுகளுக்கும் பொருந்தும். முறையான மீள்பார்வை செய்தால் ஒவ்வொன்றின் தன்மையையும் அறியமுடியும்.
  8. மூல ஆவணத்திற்குப் பல சிறந்த அறிஞர்களும் ஆர்வலர்களும் சான்றாதாரம் அளித்துள்ளனர். திரு.பாலச்சந்திரன் (இலங்கை), முனைவர் ழான் செவ்வியார் (பிரான்சு), முனைவர் எல்மார் நிப்ராத்(செருமனி), முனைவர் கல்யாணசுந்தரம்(சுவிட்சர்லாந்து), மருத்துவர் செயபாரதி (மலேசியா), திரு.இராமன்ராச்(சென்னை), திரு.விசயராகவன் வன்பாக்கம்(செருமனி), முனைவர் இராசம் (அமெரிக்கா), முனைவர் விசயவேணுகோபால் (புதுவை), திரு.மணிவண்ணன்(சென்னை/ அமெரிக்கா), திரு.ஏ.இளங்கோவன்(சென்னை). முன்னீட்டில் இருக்கும் 62 குறியீடுகளுக்கு, ஒவ்வொருவரும் அவற்றில் ஒருசிலவற்றிற்கான தமது ஆதரவையும் சான்றாதாரங்களையும் ஆவண ஆசிரியருக்கு உதவியிருக்கிறார்கள். ஆனால், எந்தவொரு அறிஞரும் அல்லது ஆர்வலரும் 62 குறியீடுகளுக்குமான முழுமையான ஆராய்ச்சியையும், ஆதரவையும், சான்றுகளையும் கொடுக்கவில்லை. அவர்களின் ஆதரவு என்பது இப்படியொரு குறியீடு இருந்தது என்பதைத் தமது பட்டறிவிலிருந்து தெரிவித்துள்ளதேயாகும்; அவ்வளவே! இதை, “உலக அறிஞர்கள் எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள்” என்று தமிழக அரசு புரிந்துகொண்டால், அது மிக மிகத் தவறான புரிதலாகவே இருக்கும். காரணம், அவர்கள் “ஒன்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் இருந்தால், எந்தக் குறியீட்டைத் தேர்ந்தெடுப்பது?”, “அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க என்ன ஆராய்ச்சி அடிப்படைகளைக் கைக்கொள்வது?”, “ஒரு குறியீட்டின் காலவாரிப் பயன்பாடு என்ன?”, “அதன் தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கை போன்ற தமிழர்கள் வாழும்பகுதிகளில் நிலவும் வழக்கு வேறுபாடுகள் என்ன?” – என்பது போன்ற செய்திகளை, நெறிமுறைகளை ஆராய்ச்சி அடிப்படையிற் செய்தவர்களல்ல.
  9. ஆகவே, இவ் ஆவணத்தையும் அது காட்டும் சான்றாதாரங்களையும், ஆவணம் குறியீடுகளைத் தேர்ந்தெடுக்கின்ற முறையையும், இலக்கியம், தொல்பொருள், சுவடியியல், நாணயவியல், மொழியியல், கல்வெட்டியல், கணக்கியல், பத்திரப்பதிவுத்துறை ஆகிய, தமிழக அரசுத் தமிழ்த்துறைகளில் இருக்கும் பணியில் உள்ள அறிஞர்களின் முழுமையான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை அப்படியே நிலுவையில் இருக்கிறது. இதுதவிர சில குறியீடுகளைப் பயன்படுத்துவோரின் பட்டறிவும் இங்கு அடிப்படைத்தேவையாகும். மேற்சொன்ன துறைகள், ஆவணம் சொல்லும் குறியீடுகளின் பயன்பாட்டோடு தொடர்புடையவை. (சிறந்த அறிஞர்களின் பங்களிப்பு, சம-அறிஞர்களால் மீளாய்வு செய்யப்படாமல் வெளியாவதை அவ் அறிஞர்களே விரும்ப மாட்டார்கள்). ஆங்கிலத்திற் சொன்னால் “The scholars have provided Advisory and Consultative support to the document. The acknowledgement and acceptance to the document have to come from the field and functional scholars in service”. இப்படிச் செய்வதே அறிவியல் சார்ந்த நடைமுறையாகும். பின்ன, சின்னங்கள் தொடர்பான ஒருங்குறி விதயங்களில் இங்கே சொல்லியிருப்பது மிகப்பெரிய குறையும் இடைவெளியுமாம். இங்கு நான் “பணியில் இருக்கும் அறிஞர்கள்” என்று சொல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  10. தமிழ் இணையக் கல்விக் கழகம்அரசின் இந்நிறுவனம் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் அரசின் சார்பாக உறுப்பியம் கொண்டுள்ளது. ஆனால், இந்நிறுவனத்தில் ஒருங்குறி கண்காணிப்பு, மேம்பாடு ஆகியவற்றிற்குப் போதுமான தனியான ஆள்வசதி இல்லை. [ஒரு தனி அலுவலர் கிடையாது; நிலைத்த அறிஞர் குழு பருவஞ் சார்ந்து கூடி ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குத் தமிழ்குறித்து வந்துசேரும் முன்னீடுகளை அலசுவது கிடையாது. வெவ்வேறு தனிமாந்தர் தமிழ் குறித்தோ, தமிழுக்குத் தாக்கம் வரும்படியோ ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு முன்னீடுகள் கொடுப்பதும், அதைக் கண்டு தட்டுத் தடுமாறி தமிழ் இணையக் கல்விக்கழகம் மறுவினைகள் செய்வதுமாய் இதுகாறும் நடந்துகொண்டிருக்கிறது.] தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நிறுவன இயக்குநர், உத்தமம் அமைப்புடன் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி அவ்வப்போது ஆர்வலரின் கூட்டங்களைக் கூட்டிச் செய்யும் அமைப்பின் செயற்பாடுகளே ஒருங்குறி குறிதத செயற்பாடுகளாக நடப்பில் இருக்கின்றன. ஆகவே, அரசுத்தரப்பில், த.இ.கவில் ஒருங்குறி ஆவணங்களைச் சிறந்த பகுப்பாய்வு செய்தற்குப் போதுமான வளம் இப்போதில்லை என்பது தொடர்கின்ற “அமைப்பு வரிதியான” பெரிய இடைவெளியாகும் (organizationally big gap).
  11. உத்தமம் அமைப்பு – இவ் அமைப்பில் தற்போது 149 உலகளாவிய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான பொதுமன்றக்குழுவும் இருக்கிறது. இவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 60 பேர் கொண்ட பொதுக்குழுவும் இருக்கிறது. இப்பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் 9-10 பேர் கொண்ட உயர்மட்டச் செயற்குழுவும் இருக்கிறது. தவிர ஒருங்குறி-பணிக்குழு என்றவொன்றும் செயற்பாட்டிலுள்ளது (Infitt-Wg02). இந்தப் பணிக்குழுவில் தான் ஒருங்குறிச் சேர்த்தியத்துடன் தொடர்பாடும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள். மேலே அட்டவணை-1 & 2ல் காணப்படும் ஆவண ஆசிரியர்கள் அதில் பங்கேற்கிறார்கள். இந்தப் பணிக்குழுவில் நிகழும் ஒருங்குறி சார்ந்த பணிகளுக்கும் உத்தமம் அமைப்பின் மற்ற பொதுமன்றம், பொதுக்குழு, செயற்குழு ஆகிய அமைப்புகளுக்கும் யாதொரு கருத்தாடற்தொடர்பும், ஆய்வுசார்ந்த நிகழ்வுகளும் ஒருங்குறி விதயத்திலில்லை. தமிழ் இணையக்கழகத்தின் இயக்குநரை உள்ளிட்ட வெகுசிலர் மட்டுமே இது தொடர்பாக உத்தமம் பணிக்குழுவில் உரையாடிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆக, ஒருங்குறி ஆவணங்களை மீளாய்வு, மீள்பார்வை செய்ய, உத்தமம் அமைப்பிலும் பெரிதாக வாய்ப்பில்லை. எனவே, வெகுசில ஆர்வலர்களைத் தவிர, தமிழக அரசிலும் தக்கோர் இல்லை; உத்தமம் போன்ற ஆர்வலர் அமைப்பிலும் வாய்ப்பில்லை எனும்போது, இந்த ஒருங்குறிப்பணிகள் வெகுசில தனிமனிதர்களைச் சுற்றியே நடந்து கொண்டிருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். இது, ஒருங்குறி ஆவணங்கள் பற்றிய மாற்றுக்கருத்துகள், மீள்பார்வைகள், ஆழமான ஆய்வுகள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்த்துவிடுகின்றன. இன்றைய சூழலில் காணப்படும் ஆகப்பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்றாகும்.
  12. மேலும், ஒரு பணிக்குழு என்றால் அதிலிருந்து வெளியாகும் முடிவுகள் ஒருமித்த கருத்துகளைக் கொண்ட ஒற்றை முடிவாக மட்டுமே இருக்கமுடியும். அட்டவணை-1 & 2ல் இருக்கும் ஆர்வலர்கள் யாவருமே உத்தமம் பணிக்குழுவில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இருந்து சேர்த்தியத்திற்குச் சென்றிருக்கும் ஆவணங்கள், கடிதங்கள் ஆகியவற்றை நோக்குங்கால், பணிக்குழு நிறைவாகச் செயல்படமுடியாத நிலை இருக்கிறதென்பதைப் புரிந்துகொள்ள முடியும். திரு.இரமணசர்மாவின் மூல ஆவணத்திற்கூட “பணிக்குழுவின் சில உறுப்பினர்களிடம் மட்டுமே கலந்து பேசியுள்ளதாகத்” தெரிவித்துள்ளார். (பக்கம்-66, 2b). மேலும், பணிக்குழு என்பது ஒருங்குறிக்குள் செல்லவேண்டிய குறியீடுகளை உருவாக்கும் குழுவாகத் தென்படுகிறதன்றி, அதனை ஒரு பயனர் குழுவாகக் (User Community) கருதமுடியாது. ஒருங்குறிச் சேர்த்தியம், “பயனர் குழுக்களிடம் இவ் ஆவணம் பகிரப்பட்டதா?” என்று கேட்கும் கேள்விக்கு, திரு.இரமணசர்மா, உத்தமம்-பணிக்குழுவை பயனர் குழுவாகக் காட்டியிருக்கிறார். அது நடைமுறையில் தவறாகவே இருக்கிறது. ஆக, உத்தமம் பொதுஅமைப்பு உள்ளிட்ட வேறு பல நல்ல பயனர் குழுக்களில் இவ் ஆவணம் பகிரப்படவேயில்லை என்பதும் நோக்கத்தக்கது.
  13. இப்படி ஆவணங்களை அனுப்புநர்களுக்கு ஆதரவாகத் தனித்தனியாகப் பல தனிஆர்வலர்கள் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் கடிதம் எழுதுவது வாடிக்கை. இவர்களும், அரசின் மூலம் இதனை அனுப்பமாட்டார்கள். “நான் இன்னார் – இன்னார் சொல்லியிருக்கும் கருத்துகளை ஆதரிக்கிறேன்” என்று சில வரிகளில் சேர்த்தியத்திற்கு எழுதி அனுப்புவார்கள். இதுவும், தமிழக அரசாங்கம், சேர்த்தியத்துடனான தொடர்புகளுக்கு நெறிமுறை, கட்டுப்பாடுகள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையே காட்டுகிறது. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த இடைவெளியுங் களையப்படவேண்டும். ஒருங்குறி சார்பான முடிவுகள், ஒரு அரசின் பலதுறைகள் பங்கேற்கும் நிலைக்குழு ஒன்றின் வழியே செயல்படவேண்டுமே தவிர, தனியார்களின் “லாபி அரசியல் (lobby politics)” வழியே நடைபெறக்கூடாது. இது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடும். இந்த “லாபி தமிழ் அரசியல்தான்” 2010ல் தமிழ்-ஒருங்குறியில் கிரந்தக் கலப்புத் தொடர்பான பெரிய கொந்தளிப்பையே தமிழகமெங்கும் ஏற்படுத்தியது. இறுதியில் அப்போதைய அரசு, நீதியரசர் மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் பெற்ற பட்டறிவை அடிப்படையாகக் கொண்டு “ஒருங்குறி விதயங்களில் இருக்கும் இடைவெளிகளைச் சரிசெய்யும் நெறிமுறைகளைத்” தற்பொழுதேனும் அரசு உருவாக்கவேண்டும்.
  14. இந்தப் பின்ன, சின்ன விதயத்தில், அதன் உள்ளடக்கங்களில், மேலே எடுத்துக்காட்டியிருப்பது போல எத்தனையோ விதயங்கள் ஆராயப்படாமல் இருக்க, தமிழ் இணையக் கல்விக் கழகம், 05-மார்-14 அன்று ஒரு கருத்தரங்கத்தை நடத்தி, அதில், இந்தப் பின்ன, சின்ன தமிழ்ப்பெயர்களுக்கு ஆங்கிலப் பலுக்கல் பற்றி விவாதித்ததோடு அமைந்துவிட்டது மிகவும் கவலைக்குரியதாகும். அதுவும் அக்கருத்தரங்கின் 5 வெவ்வெறு அமர்வுகளில் இவ் அமர்வும் ஒன்றாகும். அதிகபக்கம் 2 மணிநேர உரையாடலில், 55 முதல் 62 குறியீடுகளின் வரைவு, வழக்கு, வடிவம், காலம், ஆதாரம், ஆய்வு போன்ற முகன்மையான விதயங்களை விடுத்து, வெறுமே ஆங்கிலப் பலுக்கல் மட்டுமே அங்கு பேசப்பட்டது வருத்தத்திற்குரியது. அக்கருத்தரங்கில், மேலும் விவாதிப்பதற்கு எழுவர்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழு கூடி எதையும் இதுவரை விவாதிக்கவில்லை. அதற்குள், 25-சூலை-14ல் வேறொரு உயர்மட்டக்குழு கூடி ஆங்கிலப் பெயர்களுக்கொரு பலுக்கல் அட்டவணைக்கும், பெயர்களுக்கும் ஒப்புகை அளித்துவிட்டது. இரண்டு சிறிய கூட்டங்களில், 5 ஆண்டுகளாகப் பேசப்படும் 55-62 குறியீடுகளை அரசாங்கம் ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட நேரம் அதிகபக்கம் 4 மணி நேரம் மட்டுமே என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒன்றாகும். இப்படி,
  15. அரசாங்கத் துறைகளும் சரியாக ஆய்வு செய்யாமல், உத்தமம் போன்ற ஆர்வலர் அமைப்புகளும் ஆய்வு செய்யாமல், ஒருங்குறிச் சேர்த்தியமும் செவ்விய ஆய்வுகளைச் செய்யாமல் தமிழ் ஒருங்குறியை எவ்வாறு பேணமுடியும்?
    மேலும்
    , இப்படி எடுக்கப்பட்ட முடிவில் (அட்-1 எண்-12), ஒப்புகை அளிக்கப்பட்ட உரோமன் எழுத்துப் பலுக்கல் அட்டவணை மிகத் தவறானதாகும் என்பதே எனது கருத்தும் பல அறிஞர்களின் கருத்துமாகும். ஆனால், இதைவிட பல மடங்கு தவறுகளை உள்ளடக்கியிருக்கும் ஒருங்குறி விதயங்களின் முன்னர் இது மிகச் சிறிய தவறுதான் என்றாலும், இதுவும் ஏற்கக் கூடியதாக இல்லை. மாற்று முறைகளை முறையாக உருவாக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
  16. பின்ன, சின்ன குறியீடு பற்றி அட்டவணை-1,2 ஆகியவற்றில் காணப்படும் ஆவணங்களைக் காணும்போது, இந்தக் குறியீட்டு முயற்சி ஏறத்தாழ 5 ஆண்டுகளாக நடைபெறுவதைக் காணமுடியும். உத்தமம் பணிக்குழுவில் இருப்பவர்களே நிறைய ஆவணங்களை சேர்த்தியத்திற்கு அனுப்பியுள்ளார்கள். இவ் ஆவணங்கள் யாவுமே, முறையான பயனர் ஆய்வு, துறைசார் அரசு அறிஞர் ஆய்வு இல்லாமல் தேக்கங்கள் கண்டதாலேயே இவ்வளவு காலத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பணியை, “Delivery Focussed Task”, “Quality Focussed Task” என்று இருவகையாகப் பிரிக்கலாம். பின்ன, சின்ன விதயத்தில், உத்தமம் பணிக்குழு உறுப்பினர்கள், ஆளுக்கொரு முன்னீடுகளை முன்வைத்து, அவரவர்களின் ஆதரவுகளைத்(லாபி) திரட்டி, எப்படியாவது தங்களின் குறியீடுகளை ஒருங்குறிக்குள் கொண்டு சேர்க்கவேண்டும் என்று செய்த முயற்சியை “Delivery Focussed Task” எனச் சொல்லலாம். இந்த நிலையிலாவது, பின்ன, சின்ன குறியீட்டு முயற்சிகளை ஒருங்குறிக்குள் சேர்க்க, தமிழக அரசு, தரமிக்க நெறிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தினால், அது உலகம் பாராட்டும் “Qualiy Focussed Task” ஆக அமையும். 5 வருடங்கள் ஆகிய இந்த முயற்சியை செம்மையாகச் செய்துமுடிக்க, மேலும் சில மாதங்கள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தேவையில்லாமல், வெளிநாட்டுத் தமிழர்களின் நெருக்குதல், வெளிநாட்டு நிறுவனத்தின் நெருக்குதல் என்ற அழுத்தத்திற்கெல்லாம் இடம் கொடாமல் உறுதியாக, தமிழக அரசு இந்த நல்ல செயலைச் செய்ய வேண்டும்.

முக்கியப் பரிந்துரைகள் – தொகுப்பு:

நிலைக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இந்த நிலைக்குழுவில், கணியிற் பழக்கங் கொண்ட தமிழ் இலக்கிய இலக்கண அறிஞர் ஒருவர், மொழியியலாளர் ஒருவர், ஊடகஞ் சேர்ந்த தமிழறிவாளர் ஒருவர், சுவடியியல், நாணயவியல், கல்வெட்டியல் அறிந்த தொல்லியல் அறிஞர் இருவர், திராவிடமொழிகள் அறிந்த வல்லுநர் ஒருவர், பாகதம்/சங்கதம் அறிந்த வல்லுநர் ஒருவர், கணிப்பொறிஞர் இருவர், ஒருங்குறி விவரங்களும் அதன் சிக்கல்களும் அறிந்த அறிஞர் இருவர், பழங்கணிதமும் அறிவியலும் அறிந்த அறிஞர் ஒருவர் போன்ற பல்துறைசார் அறிஞர்கள் இருக்கவேண்டும். (சில ஆய்வு மாணவர்களும் இருப்பது ஒருங்குறி பற்றிய அறிவு மாணவரிடையே வளர உதவும்). இந்த நிலைக்குழு, தேவைப்பட்ட போது வேறு வல்லுநரை அந்தந்த இடுகைகளுக்குத் (issues) தக்கத் தற்காலிக உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம். முக்கியமாக இவர்கள் யாவரும் தமிழக அரசுப் பணியில் இருக்கவேண்டும்.

சேர்த்தியத்திற்கு அளிக்கப்படும் முன்னீடுகள் இக்குழுவினால் வரைவு, வரிவடிவம், உள்ளடக்கம், காலம், வழக்கு, துல்லியம் போன்ற அனைத்து துறைசார் காரணங்களுக்காகவும் சிறப்பாக மீளாய்வு செய்யப்படவேண்டும். முன்னீடுகளில் காணப்படும் சான்றாதாரங்கள் உண்மையானவையா என்று பரிசீலிக்கவேண்டும். (கடந்த 2009-10ல் சேர்த்தியத்திற்கு அளிக்கப்பட்ட முன்னீடு ஒன்றில் பொய்யாவணத்தை ஒரு ஆர்வலர் இணைத்திருந்தது அந்தப் பன்னாட்டு மன்றத்தில் தமிழகத்திற்குப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.)

தமிழக அரசுப்பணிகளில் உள்ள அறிஞர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குத் தன்னிச்சையாக ஆதரவுக் கடிதங்களை அனுப்பாமல், அதனைத் தங்கள் துறையதிகாரிகளின் ஒப்புதலோடு நிலைக்குழுவின் வழியே அனுப்பவேண்டும். இந்தப் பின்ன & சின்ன முன்னீட்டை நிலைக்குழு நெறிமுறைகளுக்குட்படுத்தி சேர்த்தியத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

எனது இந்த நெடுமடலைத் தாங்கள் பொழுதெடுத்துப் படித்ததற்கு மிக்க நன்றி. ஒருங்குறி பேணல் என்பது இத்தோடு முடிவதல்ல. நீண்ட நெடுங்காலம், பல பத்தாண்டுகளுக்குத் தொடரப் போகிற, தமிழ்க்கணிமையின் அச்சாணியாக இருக்கபோகிற முக்கிய விதயம் என்பதால், பல்வேறு கோணங்களில் ஒருங்குறிசார் விதயங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றிருக்கிறேன். இவற்றைத் தாங்கள் நோக்கிக்கண்டு தக்க நெறிமுறைகளை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், என்னிடத்து ஏதும் உதவி தங்களுக்குத் தேவைப்படின் அதைச் செய்வதற்கு அணியமாக இருப்பேன். வணக்கம்.

                            அன்புடன்

                                நாக.இளங்கோவன், சென்னை

                                nelango5@gmail.com   +91 988 4050 391

படி:

    1. மூல ஆவண ஆசிரியர்
      முனைவர் இரமணசர்மா, (jamadagni@gmail.com)
    2. உயர்மட்டக் குழு அதிகாரிகள், அறிஞர்கள் (25/7/14 கூட்டம்):
      1. முனைவர் ப.அர.நக்கீரன், இயக்குநர், த.இ.க (prnakkeeran@yahoo.co.in)
      2. முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், உ.த.ஆ.நி (iits@tn.nic.in)
      3. முனைவர் கா.மு.சேகர், இயக்குநர், த.வ.துறை (tamilvalar.akam@tn.gov.in)
      4. பேராசிரியர் பொன்னவைக்கோ, துணைவேந்தர், பாரத் பல்கலைக்கழகம் (ponnav@gmail.com)
      5. திரு.மணி.மு.மணிவண்ணன், கணிஞர், தலைவர் – உத்தமம் இந்தியக்கிளை, பணிக்குழு (mmanivannan@gmail.com)

3. உத்தமம்: முனைவர் வாசு அரங்கநாதன், தலைவர் – உத்தமம் (vasurenganathan@gmail.com)

4. நெடுங்கால ஒருங்குறிப் பட்டறிவாளரும் பங்களிப்பாளரும்:

      1. முனைவர் இராம.கி, பொறிஞர், தமிழறிஞர் (iraamaki@bsnl.in)
      2. பேராசிரியர் தெய்வசுந்தரம், தலைவர் கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவை (ndsundaram@hotmail.com)

        …..நிறைவு…..